கட்டாயத் தமிழ் தேர்வில் தேர்ச்சி மட்டும் போதும் : குரூப்-2 தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விளக்கம்

தமிழ் தகுதித் தேர்வு மதிப்பெண் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-02-27 17:31 GMT

கோப்புப்படம்

சென்னை,

2022ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன.

குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. இதற்கிடையே தேர்வின் காலை அமர்வில் மாநிலம் முழுவதும் சென்னை, கடலூர், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டது.

சென்னை, கடலூர், சேலம், தஞ்சை மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருந்தது. வினாத் தாள்களின் எண்களும் மாறி வந்ததால், தேர்வைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதுரையில் நடந்த குரூப் 2 தேர்வு குளறுபடியின்போது கிடைத்த நேரத்தில், வெளியே வந்து புத்தகத்தை எடுத்தும், மொபைல் மூலமாகவும் விடைகளைப் பார்த்து தேர்வு எழுதியதாக தேர்வர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து காலை வினாத் தாள்கள் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்தை ஈடுசெய்யும் வகையில் மதியத் தேர்வை அரை மணி நேரம் தாமதமக, 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடத்த டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது.

இந்த நிலையில், குரூப் 2 தேர்வு தொடர்பாக நடந்த விவகாரங்கள் என்ன? முறைகேடுகள் என்ன? இதில் எத்தனை தேர்வர்கள் ஈடுபட்டார்கள் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி இன்று ஆலோசனை நடத்தியது. இதில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி இருந்தனர்.

மேலும் வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தவறுதான் இந்த குளறுபடிக்குக் காரணம் என்றும் வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனம் அவுட்சோர்ஸ் முறையில் அச்சடிக்கும் பணியைச் செய்தபோது ஏற்பட்ட குழப்பமே காரணம் என்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குரூப்-2 தேர்வில் முற்பகலில் நடந்த தமிழ் தகுதி தேர்வில், தேர்ச்சி மட்டுமே போதுமானது என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் தகுதி தேர்வு மதிப்பெண், தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் பிற்பகலில் நடந்த தேர்வுத்தாள் 2ல் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், தேர்வு காலதாமதத்திற்கு காரணமானோர் மீது தேர்வாணயம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்