'பொதுமக்கள் செல்போன் மூலம் புகார்களை தெரிவிக்கலாம்'

பொதுமக்கள் செல்போன் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்ற ஆஷா அஜித் கூறினார்.

Update: 2023-05-22 18:45 GMT

சிவகங்கை,மே.23-

பொதுமக்கள் செல்போன் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்ற ஆஷா அஜித் கூறினார்.

பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட கலெக்டராக இருந்த மதுசூதன்ரெட்டி சென்னையில் சர்வே மற்றும் செட்டில்மெண்ட் பிரிவின் இயக்குனராக மாற்றப்பட்டார். சென்னையில், தொழில் வழிகாட்டி நிறுவன செயல் இயக்குனராக (வழிகாட்டுதல்) பணிபுரிந்த ஆஷா அஜித் சிவகங்கை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தின் 43-வது புதிய கலெக்டராக ஆஷா அஜித் நேற்று பொறுப்பு ஏற்றார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

புதிய கலெக்டர் பதவி ஏற்றதும் அவரை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வீரராகவன், ரத்தினவேல் மற்றும் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

குறைகளை தெரிவிக்கலாம்

பின்னர் புதிய கலெக்டர் ஆஷா அஜித் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளை ஒருங்கிணைத்து குழுவாக மக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன். பொருளாதாரம், சமூகத்தில் பின் தங்கியவர்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். ஏற்கனவே தொழில் துறை அதிகாரியாக இருந்ததன் காரணமாக தொழில்துறையை முன்னேற்ற முயற்சி மேற்கொள்வேன். பொதுமக்கள் தங்கள் குறைகளை செல்போனிலோ அல்லது வாட்ஸ்அப்செயலி மூலமோ தெரிவிக்கலாம். உடனடியாக சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

வாழ்க்கை குறிப்பு

சிவகங்கையின் புதிய கலெக்டர் ஆஷா அஜித், கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர். கடந்த 2015-ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் தேர்ச்சி பெற்றார், 2016-2017-ம் ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி உதவி கலெக்டராக பணிபுரிந்தார். பின்னர் 2017-2019-ம் ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சார் ஆட்சியராக பணிபுரிந்தார். 2019-ஆம் ஆண்டில் சென்னை தலைமைச் செயலகத்தில் துணை செயலாளராக (பொது) பணிபுரிந்தார். 2022-ம் ஆண்டில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்தார். தற்போது கடந்த 19-ந் தேதி வரை சென்னையில், தொழில் வழிகாட்டி நிறுவன செயல் இயக்குனராக (வழிகாட்டுதல்) பணிபுரிந்தார். இவருடைய கணவர் விஷ்ணுசந்திரன் தற்போது ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்