கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என மிரட்டுவதாக புகார்:ஊராட்சி கவுன்சிலருக்கு போலீஸ் பாதுகாப்பு -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என மிரட்டுவதாக ஊராட்சி கவுன்சிலருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-10-07 20:05 GMT


நெல்லை மாவட்டம் மானூர் வேப்பங்குளத்தை சேர்ந்த சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- ராமையன்பட்டி ஊராட்சி 4-வது வார்டு கவுன்சிலராக உள்ளேன். கடந்த மே மாதம் 1-ந்தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில் எனது வார்டில் உள்ள குறைகளை சரி செய்யும்படி ஊராட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்தேன். அன்று இரவில் என்னிடம் செல்போனில் பேசியவர்கள், "ஊராட்சித் தலைவரிடம் குறைகளை சொல்லக்கூடாது, மீறி பேசினால் கொலை செய்வோம்" என மிரட்டினர்.

சிலர் என் வீட்டிற்கு நேரில் வந்து, இனிமேல் ஊராட்சி அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என்றும் மிரட்டிச் சென்றனர். இதனால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் மனு அளித்தேன். இதுவரை எனக்கு பாதுகாப்பு வழங்கவில்லை. எனவே கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில்  கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி  நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் பாஸ்கர்மதுரம் ஆஜராகி, மனுதாரரை கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க கூடாது என மிரட்டல் விடுப்பது பஞ்சாயத்து ராஜ் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது அவசியம் என வாதாடினார்.

விசாரணை முடிவில், மனுதாரர் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க போலீஸ் பாதுகாப்பு கோரி மீண்டும் மனு அளிக்க வேண்டும். அந்த மனுவின் அடிப்படையில் மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்