பஸ் இயக்கப்பட்டது
நாகர்கோவிலில் இருந்து மணவாளக்குறிச்சி, சின்னவிளை பகுதிக்கு தடம் எண் 5டி/39 அரசு இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களாக அந்த பஸ் காலை வேளையில் முறையாக இயக்கப்படாமல், மாலை நேரத்தில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதனால், அந்த பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் அரசு, பஸ்சை காலை, மாலை வேளைகளில் முறையாக இயக்கி வருகின்றனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-எம்.எஸ்.சலீம், மணவாளக்குறிச்சி.
சுகாதார சீர்கேடு
சுசீந்திரத்தில் இருந்து மருங்கூர் செல்லும் சாலையில் நல்லூர் உள்ளது. இந்த சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.
இடையூறான மரம்
மாடத்தட்டுவிளையில் வாகனங்கள் செல்லும் பாதையில் இரண்டு பனை மரங்கள் இடையூறாக உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி இடையூறாக காணப்படும் பனை மரங்களை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பேட்ரிக், மாடத்தட்டுவிளை.
சாலையை சீரமைப்பார்களா?
வெள்ளிக்கோடு சந்திப்பில் இருந்து சடையங்கால் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும், அந்த சாலையின் காரணமாக வந்து கொண்டிருந்த 6 'சி' அரசு பஸ் தற்போது முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால், அந்த பகுதி கிராம மக்கள், மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என பலர் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைப்பார்களா?.
-மேகிள், வெள்ளிக்கோடு.
பயணிகள் அவதி
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இனயம் இனியநகர் பாலம் வளைவில் இருந்து சிறிது தூரத்தில் பஸ்நிறுத்தம் உள்ளது. அந்த நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் பாலத்தின் வளைவு பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். அப்போது, பஸ் பக்கவாட்டில் சரிந்து நிற்பதால் ெபண்கள், முதியோர்கள் ஏறுவதற்கு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, பஸ்சை நிறுத்தத்தில் சரியாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அப்துல் ரசாக், இனயம்.
சேதமடைந்த மின்கம்பம்
கருங்கலில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து காணப்படுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், குருந்தன்கோடு.
நடவடிக்ைக தேவை
நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையில் கோட்டார்-மணக்குடி செல்லும் சாலை உள்ளது. இரவு நேரங்களில் மாடுகள் இந்த சாலையின் நடுவே படுத்தும், திடீரென கடக்கவும் செய்கின்றன. இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவதுடன், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மலுக்கு முகம்மது, வெள்ளாடிச்சிவிளை.
குப்பைகள் அகற்றப்படுமா?
பூதப்பாண்டியில் ஜீவானந்தம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் அருகே கொட்டப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகள் முறையாக அகற்றப்படுமா?.
-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.