அழிக்கப்பட்டது
நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு நுள்ளிவிளையில் ஒரு தனியார் தென்னந்தோப்பின் அருகில் உள்ள கால்வாயில் விஷவண்டுகள் ராட்சத கூடு கட்டி உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து சென்று வந்தனர். இதுபற்றி தினந்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விஷ வண்டுகளின் ராட்சத கூடுகளை அழித்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-தங்கராஜ், வடக்கு நுள்ளிவிளை.
குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பெரியபள்ளியின் பின்புறம் பொதுகுடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயை அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். தற்போது, இந்த குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீருக்காக வேறு பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி அந்த பகுதியில் மீண்டும் குடிநீர் குழாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாய்ரு, குளச்சல்.
சேதமடைந்த சாலை
ராஜாக்கமங்கலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் ராஜாக்கமங்கலம் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே உள்ள திருப்பத்தில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. ஆனால், அந்த பள்ளத்தை முறையாக சீரமைக்காததால் ஜல்லிகள் பெயர்ந்து பள்ளமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.
பஸ் வசதி தேவை
மார்த்தாண்டத்தில் இருந்து பனச்சமூடுக்கு 85 'இ' என்ற எண் கொண்ட அரசு பஸ் தமிழக-கேரள எல்லையான ஆலம்பாறை வழியாக முழுநேரமும் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்திற்கு பிறகு இந்த பஸ் காலை, மாலை என இருவேளைகளில் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால், முதியோர் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்கு பெரும் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அரசு பஸ்சை முழுநேரமும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயபால், ஆலம்பாறை.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
கோட்டார் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையின் இரு பக்கமும் உள்ள மழைநீர் ஓடை முறையாக தூர்வாரப்படாமல் காணப்படுகிறது. இதனால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ், கோட்டார்.
சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பீச் ரோடு பகுதியில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கிற்கு எதிரே ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையின் தொடங்கத்தில் மழைநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி கான்கிரீட் தளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றோ டெகோ சிங், வேதநகர்.