தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-26 18:45 GMT

புகாருக்கு உடனடி தீர்வு

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி மெயின் பஜாரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருப்பதாக மாரிமுத்து என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் நடப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

நெல்லை அருகே சுத்தமல்லி பஞ்சாயத்து கே.எம்.ஏ.நகரில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பின்னர் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காததால், பராமரிப்பற்று காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. எனவே, புதிய குடிநீர் தொட்டியை திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

முகம்மது பயாஸ், சுத்தமல்லி.

சாலைக்கு வந்த குப்பைகள்

பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர்சந்தை நுழைவுவாயில் அருகில் காய்கறி கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை கால்நடைகள் கிளறுவதால் சாலையிலும் குப்பைக்கூளமாக உள்ளது. தற்போது பெய்த மழையில் குப்பைகளில் தண்ணீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து, குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-அருண் விக்னேஷ், பாளையங்கோட்டை.

வர்ணம் பூசப்படாத வேகத்தடை

ராதாபுரம்- விஜயாபதி சாலையில் உள்ள நடுநிலைப்பள்ளி முன்பு அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளைநிற வர்ணம் பூசப்படவில்லை. மேலும், அங்கு எச்சரிக்கை பலகை, ஒளி எதிரொலிப்பான் ஸ்டிக்கர் போன்றவை அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே, வேகத்தடையில் வர்ணம் பூசி, எச்சரிக்கை பலகை, ஒளி எதிரொலிப்பான் ஸ்டிக்கர் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் 

திசையன்விளை பேரூராட்சி செல்வமருதூர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழுகின்றன. மேலும், சாலையும் சேதமடைகிறது. எனவே, குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-ஆறுமுகநயினார், செல்வமருதூர்.

புகார்பெட்டி செய்தி எதிரொலி; குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டி காந்திநகரில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதாக, திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக குழாய் உடைப்பு உடனே சீரமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் ஆபத்தான பயணம்

சுரண்டையில் இருந்து சாம்பவர்வடகரை, பண்ெபாழி, ஆய்க்குடி வழியாக தென்காசிக்கு காலை, மாலையில் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள் செல்வதால் கூட்டம் அதிகமாக உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-ஆய்க்குடி, சுப்பிரமணியன்.

வாறுகால் வசதி தேவை

திருவேங்கடத்தை அடுத்த குலசேகரபேரி மெயின் ரோடு தேவர் சிலை மேற்கு பகுதியில் வாறுகால் வசதி இல்லாததால், அங்கு கழிவுநீர் குளம் போன்று தேங்குகிறது. சில நேரங்களில் சாலையிலும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, அங்கு வாறுகால் வசதி அமைத்து, கழிவுநீரை முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-கார்த்திகேயன், குலசேகரபேரி.

மூடப்பட்ட கழிப்பறையால் பக்தர்கள் அவதி

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகில் உள்ள பொது கழிப்பறை கட்டிடம் பராமரிப்பற்று மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதனால் பக்தர்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர். எனவே பொது கழிப்பறை கட்டிடத்தை திறந்து, முறையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-முருகன், குற்றாலம்.

ரேஷன் கடை கட்டப்படுமா?

கடையம் யூனியன் மேல ஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூர் அண்ணாநகரில் பகுதிநேர ரேஷன் கடை தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. எனவே, அங்கு நிரந்தர ரேஷன் கடை கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.


Tags:    

மேலும் செய்திகள்