புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தாழ்வாக செல்லும் மின்கம்பி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரிலைன்ஸ் கார்டன் பகுதியில் உள்ள மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் குடியிருப்புவாசிகள் அச்சம் அடைகின்றனர். தற்போது மழை காலம் என்பதால் இவ்வாறு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியசாமி, காரைக்குடி.
தேங்கி நிற்கும் மழைநீர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையின் முன்பகுதியில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
சேதுராமன், சிவகங்கை.
புதிய மின்கம்பம் தேவை
சிவகங்கை மாவட்டம், கானாடுகத்தான் பேரூராட்சிக்குட்பட்ட கொத்தமங்கலம் ரோட்டில், சமுதாய கூடம் அருகில் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த நிலையில் உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் இந்த மின்கம்பத்தால் மின்விபத்து வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக ஆபத்தான மின்கம்பத்தை அகற்றுவார்களா?
பாலமணிகண்டன், சிவகங்கை.
தொற்றுநோய் அபாயம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீஸ் காலனி மேற்கு பகுதியில் அண்ணாநகர் பிரதான சாலையை இணைக்கும் வாய்க்கால் உடைந்து உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது. எனவே வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்துல், காரைக்குடி.
வாகன ஓட்டிகள் சிரமம்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வழியாக திருச்சி- பரமக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இந்த சாலையில் வேகத்தடைகள் அதிகமாக உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் பெருமளவில் சிரமப்படுகின்றனர். இந்த வேகத்தடைகளை இணைப்பு சாலையில் அமைத்தால் வாகனஓட்டிகளுக்கு உதவிகரமாக இருக்கும். எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லூயிஸ், காளையார்கோவில்.