'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-23 16:00 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வேகத்தடைகளில் அடையாள குறியீடு

திண்டுக்கல் நகரில் பெரும்பாலான சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை நிறத்தில் அடையாள குறியீடு இல்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வேகத்தடை இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். விபத்துகளை தடுப்பதற்கு வேகத்தடைகளில் அடையாள குறியீடு வரைய வேண்டும்.

-ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.

எரியாத தெருவிளக்கு

தேனி மாவட்டம் கெ.கல்லுபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இரவில் அந்தபகுதி இருளில் மூழ்கிவிடுவதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு சரிசெய்து எரியவைக்க வேண்டும்.

-பொதுமக்கள், கெ.கல்லுபட்டி.

மைதானத்தில் செடிகள் ஆக்கிரமிப்பு

பெரியகுளத்தில் இருந்து சோத்துப்பாறை அணைக்கு செல்லும் சாலையில் அரசு பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் பெரும் பகுதியில் செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. விஷப்பூச்சிகள் நடமாடுவதால் மைதானத்தில் விளையாடவும், நடை பயிற்சி மேற்கொள்ளவும் பயமாக இருக்கிறது. எனவே மைதானத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்.

-சதீஷ், வடுகபட்டி.

குடிநீர் குழாய் உடைப்பு

பெரியகுளம்-சோத்துப்பாறை சாலையில் விளையாட்டு மைதானம் அருகே கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாக செல்கிறது. குடிநீர் வீணாவதை தடுக்க குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

-செல்வராஜ், தாமரைக்குளம்.

சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?

தேனி மாவட்டம் சுருளிஅருவியில் உள்ள சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும், சேதம் அடைந்தும் காணப்படுகின்றன. இதனால் பூங்கா இருந்தும் பயன் இல்லாமல் கிடக்கிறது. சுற்றுலா வரும் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. எனவே சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும்.

-பொம்முராஜ், சுருளிபட்டி.

அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் 

கூடலூரில் முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் தங்கி இருந்த வீடு உள்ளது. தற்போது அது பராமரிப்பு இல்லாமல் கிடப்பதால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே கர்னல் ஜான் பென்னிகுயிக் தங்கி இருந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும்.

-மணிகண்டன், கூடலூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலையில் மேம்பாலத்தின் அருகே பழனி செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதில் நடந்து சென்று தான் பயணிகள் பஸ் ஏறும் நிலைஉள்ளது. மேலும் மக்கள் நிற்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கு கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ்கண்ணன், திண்டுக்கல்.

பாதாள சாக்கடை அடைப்பு

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் பின்னால் உள்ள ஆர்.எஸ்.சாலையில் பாதாள சாக்கடை அடிக்கடி அடைப்பு ஏற்பட்டுவிடுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

-கணேசன், திண்டுக்கல்.

தெருவில் மண் குவியல்

திண்டுக்கல் செயின்ட் சேவியர் தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டு மண் தெருவில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆட்டோக்களில் கூட செல்ல முடியவில்லை. எனவே தெருவில் உள்ள மண் குவியலை அகற்ற வேண்டும்.

-ராஜா, திண்டுக்கல்.

பொது சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

குஜிலியம்பாறை அருகே பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட சேவகவுண்டச்சிப்பட்டியில் கடந்த 2016-17-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை இந்த சுகாதார வளாகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் அது முட்புதர்கள் மண்டி பயனற்று காணப்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-என்.ஸ்டாலின், குஜிலியம்பாறை.

------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

------

Tags:    

மேலும் செய்திகள்