கூடுதல் பஸ்கள் தேவை
சிவகங்கை நகரில் 2 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதே போல தினமும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பல்வேறு வேலைகளுக்காக சிவகங்கைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் காலையில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே, காலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகங்கை.
ஆக்கிரமிப்பு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திண்டுக்கல்-காரைக்குடி சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இந்த சாலையில் விபத்துக்களை தடுக்க தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
பாலா, சிங்கம்புணரி.
சேதமடைந்த சாலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் சில இடங்களில் சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த சாலையில் செல்லும் போது வாகனங்களும் பழுதாகி விடுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காரைக்குடி.
ஆபத்தான மின்கம்பம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி கழனிவாசல் பொது கழிவறை எதிர்ப்புறம் ரோட்டில் உள்ள மின் கம்பம் மிகவும் சேதமடைந்து உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறும் முன்பாக ஆபத்தான அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
சரவணன், காரைக்குடி.
நாய்கள் ெதால்லை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். நாய்கள் தொல்லையால் தெருவில் செல்லவே பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
குமார், இளையான்குடி.