'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-10 21:08 GMT

பூட்டியே கிடக்கும் பாலூட்டும் அறை

தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலைய வளாகத்தில குழந்தைகளுடன் வரும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. இது பல நேரங்களில் பூட்டியே வைக்கப்பட்டிருப்பதால் தாய்மார்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த அறையை தினமும் காலை முதல் இரவு வரை முறையாக திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், தர்மபுரி.

===

மேம்பாலங்கள் அமைக்கப்படுமா?

கிருஷ்ணகிரியில் ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க கடும் சிரமப்படுகிறார்கள். விபத்துகளும் அடிக்கடி நடக்கின்றன. அரசு மருத்துவக்கல்லூரி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கான ஆய்வு பணிகளும் நடந்து அடுத்த கட்டத்திற்கு செல்லாத நிலையில் உள்ளது. எனவே இந்த பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சமீர்ராஜூ, குருபரப்பள்ளி, கிருஷ்ணகிரி.

====

அடிப்படை வசதிகள் வேண்டும்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பூதநத்தம் ஊராட்சியில் குண்டல்மடுவு கிராமத்தில் இருளர் காலனி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்து தரப்படவில்லை. கிணற்று நீரையே நம்பி வருகின்ற இவர்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இந்த இருளர் காலனி மக்கள் குடிநீரின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை முன்வர வேண்டும்.

-ராஜன், குண்டல்மடுவு, தர்மபுரி.

=====

குண்டும், குழியுமான சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்து அளவைபட்டி முனியப்பன் கோவிலில் இருந்து நடுப்பட்டியை இணைக்கும் இந்த ்சாலை மிகவும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தாசன்காடு, நான்கு ரோடு பகுதி மக்கள் மற்றும் ஆண்டிவலசு பகுதியில் இருந்து அளவாய்ப்பட்டிக்கு செல்லும் பொதுமக்கள் சாலையில் செல்ல கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், வெண்ணந்தூர்.

===

குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

சேலம் உடையாப்பட்டி மின் அலுவலகம் அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உள்ளேயே பாரும் இயங்குகிறது. இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அருகில் உள்ள ஓடை மற்றும் அதன் கரையோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை ஓடையில் கொட்டாமல் முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், உடையாப்பட்டி, சேலம்.

====

எரியாத தெருவிளக்குகள்

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி 24-வது வார்டு புவன கணபதி கோவில் தெரு பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் எரிய செய்ய வேண்டும்.

-பொதுமக்கள், புவன கணபதி கோவில் தெரு, இடங்கணசாலை.

===

நோய் பரவும் அபாயம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த தொப்பப்பட்டியில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. அந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அலுவலகத்தை சுற்றி தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், தொப்பபட்டி, நாமக்கல்.

=====

சாக்கடை கால்வாயில் அடைப்பு

சேலம் மாநகராட்சி 26-வது வார்டு அரிசிபாளையத்தில் ராஜாகண்ணு தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்துவிட்டன. மேலும் நோய் தொற்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் இதனை உடனே சரிசெய்ய வேண்டும்.

-செல்வகுமார், அரிசிபாளையம், சேலம்.

====

Tags:    

மேலும் செய்திகள்