'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-06 21:25 GMT

குப்பைதொட்டி வைக்க வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பொம்மிடிபேட்டை தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்கு குப்பை தொட்டி இல்லாததால் அந்த பகுதி மக்கள் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.

-சீனுவாசன், பொம்மிடிபேட்டை, கிருஷ்ணகிரி.

====

தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கொசு தொல்லை அதிகரித்துவிட்டது. மேலும் சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவுபொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது, சாக்கடை கால்வாயை தூர்வாரி, மழை நீர் தங்கு தடையின்றி செல்ல நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நூர் முகமது, சென்னை சாலை, கிருஷ்ணகிரி.

===

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டி வழியாக வெலகலஅள்ளி வரை 16 என்ற எண் கொண்ட டவுன் பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் இரவில் நேரங்களில் கிருஷ்ணகிரியில் இருந்து வெலகலஅள்ளிக்கு பஸ் வருவதில்லை. இதனால் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து வேலைக்கு சென்று வீடு திரும்புபவர்கள் பஸ் வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு இரவில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

-அன்புசெல்வன், வெலகலஅள்ளி, கிருஷ்ணகிரி.

===

சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஏர்கோல்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஊரின் மையப் பகுதியில் ஊராட்சிமன்ற அலுவலகம், ரேஷன் கடை, கோவில் அமைந்துள்ள இதன் அருகே சாக்கடை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. ஊரின் மையப் பகுதியில் மட்டுமில்லாமல், அனைத்து தெருக்களிலும் இதே அவல நிலை தான் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இத்தகைய சுகாதார சீர்கேடான நிலையில் நோய் ஏற்படும் அபாயம் எனவும், மேலும் கொசுதொல்லை இருப்பதாகவும், துர்நாற்றத்திற்கு இடையே மக்கள் வசிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைக்க முன்வரவேண்டும்.

-முருகன், ஏர்கோல்பட்டி, தர்மபுரி.

====

கரும்புகையால் மூச்சுதிணறல்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் சில ஓட்டல்களில் இருந்து வரும் கரும்புகையால் அதிக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

-குரு, இளம்பிள்ளை, சேலம்.

===

திருடர்கள் தொல்லை

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இரவு நேரங்களில் நடைபயிற்சி செல்வோர் மற்றும் அங்கு தடகள பயிற்சி எடுக்கும் மாணவர்களின் சைக்கிள்கள் அடிக்கடி மர்ம நபர்களால் திருடப்படுகின்றன. மேலும் இரவில் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கே போட்டுவிட்டு செல்கின்றனர். அங்கு கண்காணிப்பு கேமரா இல்லாததால் திருடர்கள் கைவரிசை காட்டுகிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மைதானத்தில் கூடுதல் மின்விளக்கு அமைத்து. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

-ஜெயபிரகாஷ், சேலம்.

===

பராமரிப்பு இல்லாத பூங்கா

சேலம் மாநகராட்சி தர்மநகர் பூங்காவில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு செல்கிறார்கள். மேலும் பாட்டில்களை ஆங்காங்கே உடைத்து போட்டுவிடுகின்றனர். அந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அச்சத்துடனே செல்கிறார்கள். மேலும் பூங்காவின் நுழைவு வாயில் முன்பு சேதமடைந்த குப்பை தொட்டிகள் கிடக்கின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

-குமார், தர்மநகர், சேலம்.

===

குண்டும், குழியுமான தார்சாலை

சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த சிங்கிரிப்பட்டி மைசூர் மெயின் ரோடு முதல் கோட்டமடவு, சந்திரியூர், மேட்டுப்பாளையூர் செல்லும் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையில் சென்று வர சிரமப்படுகின்றனர். தார் சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சென்னகிருஷ்ணன், சிங்கிரிப்பட்டி, சேலம்.

===

Tags:    

மேலும் செய்திகள்