'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மழைநீரில் கலந்த கழிவுநீர்
தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மழையின் காரணமாக தாழ்வான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சில இடங்களில் கழிவுநீர் செல்ல வழியின்றி மழைநீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையில் தேங்கி உள்ள கழிவுநீர் வழிந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலை, தர்மபுரி.
---
குப்பைகள் அள்ளப்படுமா?
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் குப்புச்சிபாளையம் மாரியம்மன் கோவில் பின்புறத்தில் குப்பைகள் தேங்கி உள்ளது. குப்பைகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அள்ளப்படாமல் அப்படியே காட்சி பொருளாக காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுப்பார்களா?
-வி.அருண்குமார், குப்புச்சிபாளையம், நாமக்கல்.
====
மின்கம்பத்தை ஆக்கிரமித்த செடி, கொடிகள்
சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறம் மணியனூர் வீட்டு வசதி வாரியம் அமைந்துள்ளது. அங்கு உள்ள உயர் மின் அழுத்த கம்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்துள்ளன. இதனால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மின் கம்பத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
-செல்வகுமார், கொண்டலாம்பட்டி, சேலம்.
===
பஸ் வசதி வேண்டும்
சேலம் மாவட்டம் வீரபாண்டியை அடுத்த பெருமாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கஞ்சமலையை சுற்றி 16-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த பகுதியில் விசைத்தறி, வெள்ளிப்பட்டறை, கட்டுமான தொழில், விவசாயம் செய்வோர் என பலர் உள்ளனர். ஆனால் அந்த பகுதிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் வேலைக்கு செல்வபர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
-பி.சோமு, பெருமாம்பட்டி, சேலம்.
====
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படுமா?
சேலம் மாநகரத்தில் உள்ள சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தவிர்க்கவும் சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சில சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வர்ணங்கள் பூசப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படுமா?
-ஜெயா, அம்மாபேட்டை, சேலம்.
===
எரியாத தெருவிளக்குகள்
சேலம் மாநகரத்தில் ஒரு சில சாலைகளில் உள்ள தெரு விளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபடுகிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சாலைகளில் இரவு நேரத்தில் எரியாத தெருவிளக்குகளை கண்டறிந்து சரிசெய்து எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், அழகாபுரம், சேலம்.
====