புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2023-09-17 18:45 GMT

சீராக செயல்படுமா?

வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட மாடத்தட்டுவிளையில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார நிலையம் முறையாக செயல்படாமல் உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மருத்துவர், செவிலியர்களை நியமித்து சீராக செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினோ, மாடத்தட்டுவிளை.

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் மண்டபம் அருகில் உள்ள சாலையின் குறுக்கே செல்லும் கால்வாயின் மீது ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கால்வாய்க்குள் பாய்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பாலத்தின் பக்கவாட்டில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், சந்தையடி.

சாலையை சீரமைக்க வேண்டும்

திட்டுவிளை பஸ்நிலையம் முதல் மார்த்தால் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வழியாக செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

நடவடிக்கை தேவை

நாகர்கோவில் மாநகர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிடலுடன் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. வேகமாக செல்லும் வாகனங்கள் மற்றும் அதிகளவில் புகையை கக்கிச் செல்லும் வாகனங்களால் காற்று மாசடைகிறது. இதனால், வாகன புகை துகள்கள், புழுதிகள் காற்றில் கலந்து வீடுகளுக்குள் படிகிறது. மேலும், இவற்றால் முதியோர்கள், குழந்தைகளுக்கு சுவாச பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலையில் அதிவேகமாக மற்றும் அதிக புகையை கக்கிச் செல்லும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும்.

- ஜாஸ்பர், நாகர்கோவில்.

விபத்து அபாயம்

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை வடக்கு மார்த்தால் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு ஒயர்கள் சாலையின் குறுக்கே மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் இணைப்பு ஒயர்களை வாகனங்கள் இடையூறு இன்றி செல்லும் வகையில் உயரமாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேக்மைதீன், திட்டுவிளை.

தொற்றுநோய் பரவும் அபாயம்

தோவாளையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்துக்கு பின்புறம் உள்ள கழிவுநீர் ஓடை முறையாக பாராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், ஓடையில் கழிவுகள் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை முறையாக தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், நாகர்கோவில்.

Tags:    

மேலும் செய்திகள்