தரமற்ற, கலப்பட உணவு குறித்த புகார்களை ஆன்லைனில் தெரிவிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் தரமற்ற, கலப்பட உணவுகள் குறித்த புகார்களை பொதுமக்கள் ஆன்லைனில் தெரிவிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

Update: 2023-05-28 18:45 GMT

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உணவு பாதுகாப்பு உரிமம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சாலையோர உணவு வணிகர்கள், தள்ளுவண்டி கடைகளுக்கு கட்டாயம் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கடைகளில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். தரமான குடிநீர் வழங்கப்படவேண்டும்.

இரவு நேரம் மட்டும் செயல்படும் உணவு கடைகள், சில்லி கடைகள், பாஸ்ட் புட் கடைகளில் செயற்கை நிறமிகள் மற்றும் அஜினமோட்டோ பயன்படுத்தக் கூடாது. ஈக்கள் மற்றும் தூசுக்கள் புகாதவாறு உணவு தயாரித்து விற்பனை செய்யவேண்டும். பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும், மீண்டும் மறுசுழற்சிக்கு பயன்படுத்தாமல் பயோ டீசல் தயாரிக்க வழங்க வேண்டும்.

புதிய இணையதளம்

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் அச்சிடப்பட்ட காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றால் உணவை பேக்கிங் செய்வதோ, அச்சிடப்பட்ட காகிதங்களில், எண்ணெய் பிழியவோ, வைத்து உண்ண பயன்படுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே டீ கடைகள், உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள், பஸ் நிலையங்கள், எண்ணெய் பலகார கடைகள் மற்றும் அனைத்து உணவு பொருள் விற்பனை நிறுவனங்களில், அச்சிடப்பட்ட காகிதங்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களை கொண்டு பேக்கிங் செய்யவோ, உண்பதற்கு வழங்கவோ கூடாது.

தரமற்ற, கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாக, foodsafety.tn.gov.in என்கிற புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு புகார்கள் ஏதும் இருப்பின், நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் வாட்ஸ்-அப் புகார் எண் 94440 42322 தொடர்பு கொண்டு மாவட்ட நியமன அலுவலரிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்