அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது தி.மு.க. புகார்

முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர். அதேபோல முன்னாள் அமைச்சர் பாஸ்கரனுக்கு போனில் மிரட்டல் வந்ததாக அ.தி.மு.க.வினரும் பதில் புகார் தெரிவித்தனர்.

Update: 2022-11-04 18:45 GMT

முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர். அதேபோல முன்னாள் அமைச்சர் பாஸ்கரனுக்கு போனில் மிரட்டல் வந்ததாக அ.தி.மு.க.வினரும் பதில் புகார் தெரிவித்தனர்.

புகார் மனு

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 51-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், முதல்-அமைச்சர், சில அமைச்சர்களை அவதூறாக பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.

இதுகுறித்து தி.மு.க.வை சேர்ந்த வைரமணி, தமிழ்நாடு யாதவ மகாசபை உயர்மட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் தனித்தனியாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அங்கு போலீஸ் சூப்பிரண்டு இல்லாததால், துணை சூப்பிரண்டு சிபி சாய் சவுந்்தர்யனிடம் மனுவை கொடுத்தனர். அந்த மனுவில், "தி.மு.க.வுக்கு, முதல்-அமைச்சருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும், ஆட்சியை பற்றி அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பேச்சு குறிப்பிட்ட சமுதாயத்தை அவமதிப்பதாகவும் உள்ளது" என்று கூறியுள்ளனர்.

மிரட்டல்

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், "நான் பேசியதை சிலர் வேண்டுமென்றே திரித்து, நான் மிகவும் மதிக்கக்கூடிய சகோதரர்களாக பழகக்கூடிய அந்த சமுதாயத்தின் பெயரை குறிப்பிட்டு பேசியதாக தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். நான் எப்போதும் அவ்வாறு பேசியதில்லை. அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் எப்போதும் உயர்வாக கருதி செயல்பட்டு வருகிறேன்" என்று கூறினார்.

இதற்கிடையே பாஸ்கரனின் மகன் கருணாகரனிடம் செல்போனில் பேசிய ஒருவர், பாஸ்கரன் குறித்து அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ ஒன்றும் வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக அ.தி.மு.க.வினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்