பெரியாம்பட்டி சப்தகிரி கல்லூரியில் இன்று மாநில குடியரசு தின விளையாட்டு போட்டி-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்
தர்மபுரி:
பெரியாம்பட்டி சப்தகிரி கல்லூரியில் இன்று மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டி தொடங்குகிறது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
விளையாட்டு போட்டி
தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 63-வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, 6 நாட்கள் நடக்கிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து மொத்தம் 1,800 மாணவ-மாணவிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
கைப்பந்து, எறிபந்து மற்றும் கோகோ ஆகிய போட்டிகள் நடக்கிறது. முதல் 3 நாட்கள் மாணவிகளுக்கும், அடுத்த 3 நாட்கள் மாணவர்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெறும். இதன் தொடக்க விழா சப்தகிரி பொறியியல் கல்லூரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்குகிறார். முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் வரவேற்கிறார். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் திட்ட விளக்க உரையாற்றுகிறார். எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.
அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
இதில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். முடிவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் நன்றி கூறுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், சப்தகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.ஜி.சேகர், நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.