கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 3 டி.எம்.சி. நீர் இருப்பு குறைவு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு இருப்பைவிட தற்போது சராசரியாக 3 டி.எம்.சி. நீர் இருப்பு குறைவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-10-17 06:24 GMT

சென்னைக்கு குடிநீர்

சென்னை மாநகருக்கு சராசரியாக ஒரு மாதத்துக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் குடிநீருக்காக தேவைப்படுகிறது. இந்த நீரை செனனை புறநகர் பகுதிகளில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து பெறப்படுகிறது.

இதுதவிர நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்தும் குடிநீர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. தமிழக அரசு ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டுக்கு 2 தவணைகளாக 12 டி.எம்.சி. வழங்க வேண்டும். இதன் மூலம் பெறப்படும் நீருடன், வடகிழக்கு பருவ மழை மூலம் கிடைக்கும் நீரை ஏரிகளில் சேமித்து வைத்து சென்னை மாநகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

புதிய மதகு அமைக்கும் பணி

சென்னை புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பூண்டி ஏரிக்கு 160 கன அடி நீர் வந்து உள்ளது. வடகிழக்கு பருவ மழை மூலம் பெறப்படும் நீரையும் சேமிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையில் பூண்டி ஏரியில் சேதம் அடைந்த மதகை அப்புறப்படுத்தி விட்டு புதிய மதகுகள் அமைக்கும் பணி ஓரிரு வாரத்தில் நிறைவடைய உள்ளது. இந்த பணி நிறைவடைந்ததும் பூண்டி ஏரியில் நீரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந் தேதி பூண்டி ஏரியில் 2 ஆயிரத்து 807 மில்லியன் கன அடி (அதாவது 2.8 டி.எம்.சி.) நீர் இருப்பு இருந்தது. இதேபோல், சோழவரம் ஏரியில் 730 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2 ஆயிரத்து 813 மில்லியன் கன அடி (2.8 டி.எம்.சி.), கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் 469 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 840 மில்லியன் கன அடி(2.8 டி.எம்.சி) மற்றும் வீராணம் ஏரியில் 1,173 மில்லியன் கன அடி என ஆக மொத்தம் 10 ஆயிரத்து 832 மில்லியன் கன அடி நீர், அதாவது 10.8 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது.

3 டி.எம்.சி. இருப்பு குறைவு

ஆனால் தற்போது பூண்டி ஏரியில் 734 மில்லியன் கன அடி, சோழவரம் ஏரியில் 164 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2 ஆயிரத்து 638 மில்லியன் கன அடி (2.6 டி.எம்.சி.), கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 830 மில்லியன் கன அடி (2.8 டி.எம்.சி.) மற்றும் வீராணம் ஏரியில் 1,051 மில்லியன் கன அடி என ஆக மொத்தம் 7 ஆயிரத்து 917 மில்லியன் கன அடி, அதாவது 7.9 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பு உள்ளது. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டை விட தற்போது 2 ஆயிரத்து 914 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு உள்ளது. சராசரியாக 3 டி.எம்.சி. நீர் இருப்பு குறைவாக உள்ளது.

வடகிழக்கு பருவ மழை முழுமையாக கைகொடுத்தால் நிலைமை மாறி விடுவதுடன், எதிர்பார்த்த அளவு நீரை பூண்டி உள்ளிட்ட அனைத்து ஏரிகளிலும் சேமிக்கப்படும். தற்போது ஏரியில் இருக்கும் நீர் மூலம் அடுத்த 7 மாதத்துக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியும். இருந்தாலும் வடகிழக்கு பருவ மழையால் கிடைக்கும் நீர் சேமிக்கப்பட்டால் முழுமையான தேவையை அடுத்த ஆண்டு கோடை மட்டும் அல்லாது ஆண்டு முழுவதும் குடிநீர் வினியோகம் செய்ய முடியும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நீர்வள ஆதாரத்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்