கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
ஜவ்வாது மலையில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை சரவணன் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.
கலசபாக்கம்,
ஜவ்வாது மலையில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை சரவணன் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவை சரவணன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''ஜவ்வாதுமலை பகுதியில் மொத்தம் 369 கர்ப்பிணிகள் சுகாதாரத் துறை மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் முதல் கருவுற்ற 100 தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடக்கிறது. ஜவ்வாதுமலைபகுதியில் காற்றில் கூட நச்சுத்தன்மை இல்லை நீங்கள் விளைவிக்கும் தானியங்களிலும் ரசாயன உரங்கள் கிடையாது. இப்படி இருக்கும்போது 5 வயதுக்குட்பட்ட 6 ஆயிரத்து 459 குழந்தைகளில் 246 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் இயற்கை சூழலில் வசிக்கிறீர்கள். தாய்மார்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த பகுதிக்காகவும் உங்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு வகைகளில் அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்'' என்றார்.
விழாவில் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன், ஒன்றிய குழு தலைவர் ஜீவாமூர்த்தி, துணை தலைவர் மகேஸ்வரிசெல்வம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஏஞ்சலின்ராணி, ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.