கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2023-09-13 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்து நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற 215 பெண்கள் உள்பட 285 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

சாலை மறியல்

விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு மானியம் வழங்காத மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட நேற்று காலையில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கூடினர். அங்கிருந்து கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு தாலுகா செயலாளர் ஜி. பாபு, நகரச் செயலாளர் சரோஜா ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை கோவில்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி தேவானந்த், வனசுந்தர் மற்றும் போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கம்யூனிஸ்டு கட்சியினர் பயணியர் விடுதி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

285 பேர் கைது

இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் பி. கரும்பன், மாவட்ட நிர்வாக குழு சேதுராமலிங்கம், பரமராஜ், நகர துணை செயலாளர் முனியசாமி, அலாவுதீன், மாதர் சங்க நகர செயலாளர் விஜயலட்சுமி உட்பட 285 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 215 பேர் பெண்களாவர். இவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்