திருவாரூர் கொடிக்கால்பாளையத்தில் மகான் செய்யது மஸீம் சாகிப் ஒலியுல்லா நினைவை போற்றும் வகையில் மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் இணைந்து மத நல்லிணக்க பாச்சோற்று விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற்ற பாச்சோற்று விழாவையொட்டி சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. அப்போது ஏராளமானோர் அரிசி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை கொண்டு பாச்சோற்று என்னும் சர்க்கரை பொங்கல் தயாரித்து பள்ளிவாசலுக்கு கொண்டு வந்தனர். அங்கு தங்கள் வேண்டுதல்களை பிரார்த்தனை செய்து சர்க்கரை பொங்கலை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். இதில் திருவாரூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து மதத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். இதில் ஜமாத்தலைவர் முகமது ஜபருதீன், செயலாளர் முகமது சலாவுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.