விழுப்புரத்தில்அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை ஆணையர் நேரில் ஆய்வு

விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-06 18:45 GMT


விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த பட்ஜெட் கூட்ட தொடரின் போது அறிவித்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அருங்காட்சியகத்திற்கான இடமும் ஒதுக்கப்பட்டது. அங்கு ரூ.5கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணையும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியானது.

இதற்கிடையில் பெரிய அளவில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு வசதியாக 2 ஏக்கரில் நிலம் ஒதுக்கீடு செய்துத்தர அரசு அருங்காட்சியகங்கள் துறை விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த மாதத்தில் திடீரென கோரிக்கை வைத்தது. இது வரலாற்று ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் விழுப்புரத்தையடுத்து கோலியனூர் கூட்டுரோடு அருகே பனங்குப்பம் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் கடந்த வாரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிகாரி ஆய்வு

இதையடுத்து, தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் அரவிந்த் நேற்று விழுப்புரம் வந்தார். கலெக்டர் வளாகத்தில் அருங்காட்சியகத்திற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார். பின்னர், கோலியனூர்அருகேபனங்குப்பம் பகுதிக்குச் சென்று, அங்குள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசிய ஆணையர், "தற்போது பார்த்துள்ள இடங்கள் குறித்து பரிசீலனை செய்யப்படும். மேலும் தேசிய நெடுஞ்சாலையையொட்டிய பகுதிகளில் வேறு ஏதாவது இடங்கள் இருந்தாலும் ஒரு வாரத்திற்குள் தெரியப்படுத்துங்கள். அந்த இடங்களிலும் ஆய்வு செய்து பின்னர் எந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கலாம்" என்று தெரிவித்தார்.

ஆய்வின் போது விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீணா குமாரி, கடலூர் அருங்காட்சியகக் காப்பாட்சியர் எஸ்.ஜெயரத்னா, விழுப்புரம் தாசில்தார் என்.வேல்முருகன், அருங்காட்சியகம் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோ.செங்குட்டுவன், பேராசிரியர் த.ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்