விவசாய விளைபொருள்களுக்கு பொருளீட்டுக்கடன்
விருதுநகர் வேளாண் விற்பனை குழு கிட்டங்கிகளில் விளை பொருட்களுக்கு பொருளீட்டு கடன் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் வேளாண் விற்பனை குழு கிட்டங்கிகளில் விளை பொருட்களுக்கு பொருளீட்டு கடன் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
பொருளீட்டுக்கடன்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் வேளாண் விற்பனை குழுவின் கீழ் விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 18,600 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 17 கிட்டங்கிகள் உள்ளன. மாவட்ட விவசாயிகள் வேளாண் விற்பனை பொருட்களின் அறுவடை காலத்தில் அதிக விளைச்சலால் ஏற்படும் விலை வீழ்ச்சியில் விலை பொருட்களை விற்பனை செய்து இழப்பீடு அடையாமல் ஒழுங்குமுறை விற்பனை கூட கிட்டங்கிகளில் 6 மாதம் வரை விளைபொருட்களை இருப்பு வைத்து விலை ஏற்றத்தின்போது விற்பனை செய்து லாபம் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் உடனடி பண தேவைக்கு இருப்பு வைத்த விளை பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை 5 சதவீத வட்டியில் விற்பனை குழுவில் இருந்து பொருளீட்டுக்கடன் பெற்று பயனடையலாம்.
விளைபொருட்கள்
முதல் 15 நாட்களுக்கு வட்டி கிடையாது. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் விற்பனைக்குழு உரிமை பெற்ற வியாபாரிகளும், கொள்முதல் செய்த விளை பொருள்களை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 6 மாதம் இருப்பு வைத்து ரூ.2 லட்சம் வரை 9 சதவீத வட்டியில் விற்பனை குழுவில் இருந்து பொருளீட்டு கடன் பெறலாம்.
வங்கிகள் 2022-2023-ல் நடப்பு மாதம் முடிய ரூ.17.4 லட்சம் பொருளீட்டுக்கடன் 8 விவசாயிகளுக்கும் ரூ.4 லட்சம் 2 வியாபாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட ஒழுங்குமுறை விற்பனை கூட கிட்டங்கிகள் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிட்டங்கி ஒழுங்குமுறை ஆணையத்தில் சான்று பெற்று ரசீதின் அடிப்படையில் இருப்பு வைக்கப்படும். விளை பொருட்கள் மதிப்பில் 75 சதவீதம் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பொருளீட்டுக்கடன் பெறலாம்.
எனவே விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பொருளீட்டுகடனுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.