தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம்
மயிலாடுதுறையில் பல்நோக்கு சேவை மைய திட்டத்தை திரும்பபெறக்கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் விவசாய கடன், உர விற்பனை பணிகள் பாதிக்கப்பட்டது.;
உபகரணங்கள் ஒப்படைப்பு
கூட்டுறவு சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ் லாபகரமாக செயல்படுத்த இயலும் என்கிற இடங்களில் மட்டுமே திட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் லாப நஷ்டத்தை கணக்கில் கொள்ளாமல் ஏதாவது ஒரு பணியினை கட்டாயம் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சங்கங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இதில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து சங்கங்களுக்கு ஏற்படப்போகும் கடும் நஷ்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்நோக்கு சேவை மைய திட்டத்தை திரும்ப பெறாவிட்டால் அக்டோபர் 3-ந்தேதி உபகரணங்கள் மற்றும் வாகனங்களின் சாவியை ஒப்படைத்து தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் அறிவித்திருந்தது.
தொடர் விடுப்பு எடுத்து போராட்டம்
அதன்படி பல்நோக்கு சேவை மைய திட்டத்தை திரும்பப் பெறாததை கண்டித்து கூட்டுறவு பணியாளர் சங்கத் தலைவர் சத்தியசீலன், மாவட்ட செயலாளர் பரதன் ஆகியோர் தலைமையில் இந்த திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து உபகரணங்கள் மற்றும் வாகனங்களின் சாவியையும் நேற்று மாவட்ட இணை பதிவாளர் தயாளவிநாயகன் அமல்ராஜிடம் ஒப்படைத்தனர்.
இந்த போராட்டத்தினால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பணியாற்றும் கூட்டுறவு வங்கிச் செயலாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் 140 பேர் ெதாடர் விடுப்பில் சென்றால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன், உர விற்பனை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.