தூத்துக்குடியில் வருகிற 10, 11-ந் தேதிகளில் கத்தோலிக்க மறைமாவட்ட நூற்றாண்டு நிறைவு விழா

தூத்துக்குடியில் வருகிற 10, 11-ந் தேதிகளில் கத்தோலிக்க மறைமாவட்ட நூற்றாண்டு நிறைவு விழா நடக்கிறது.

Update: 2023-06-06 18:45 GMT

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டம் கடந்த 1923-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி திருச்சி மறைமாவட்டத்தில் இருந்து பிரித்து தூத்துக்குடி மறைமாவட்டம் தனியாக உருவானது. இந்த மறைமாவட்டத்தின் முதல் ஆயராக பிரான்சிஸ் திபுர்டியஸ் ரோச் பொறுப்பேற்றார். தற்போது 7- வது பிஷப்பாக ஸ்டீபன் அந்தோணி பணியாற்றி வருகிறார். இந்த மறைமாவட்டம் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் 120 பங்குகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஓராண்டாக மறைமாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நூற்றாண்டு நிறைவு விழா வருகிற 10, 11-ந் தேதிகளில் தூத்துக்குடியில் நடக்கிறது. வருகிற 10-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மறைமாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி சின்னக்கோயில் வளாகத்தில் நுற்றாண்டு நிறைவு விழா பொது நிகழ்ச்சியும், 11-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நூற்றாண்டு நிறைவு விழா நன்றி சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. திருப்பலிக்கு போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்ட் ஜிரெல்லி தலைமை தாங்குகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்