மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெயிண்டர் பலி
திங்கள்சந்தை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெயிண்டர் பலியானார்.
திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெயிண்டர் பலியானார்.
பெயிண்டர்
பாலப்பள்ளம் அருகே வடக்கு மிடாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 30). இவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு ராணித்தோட்டம் அரசு பணிமனையில் பழகுனர் பணிக்கு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பணிமனைக்கு சென்று விட்டு நேற்றுமுன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டார்.
சுங்கான்கடை அருகே களியங்காடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியை சென்றடைந்த போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது.
விபத்தில் பலி
இந்தநிலையில் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கீழே விழுந்த ஜெயராஜ் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.