மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கல்லுப்பட்டறை உரிமையாளர் பலி

கீரனூர் அருகே மகனுக்கு நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் கல்லுப்பட்டறை உரிமையாளர் பலியானார்.

Update: 2022-09-13 18:08 GMT

கீரனூர்:

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலப்பட்டியை சேர்ந்தவர் தவமணி (வயது 55). இவர், புதுக்கோட்டை-கீரனூர் சாலை கொத்தமங்கலப்பட்டியில் கல்லுப்பட்டறை நடத்தி வந்தார். இவர் இன்று தனது மோட்டார் சைக்கிளில் டீ குடிப்பதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது கீரனூர் எழில் நகரை சேர்ந்த ரெத்தினம் (62), அவரது மனைவி மாலா (50) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். தவமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ரெத்தினம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது.

உரிமையாளர் பலி

இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து 3 பேரும் கீேழ விழுந்ததில் படுகாயமடைந்தனர். தலையில் படுகாயமடைந்த தவமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்த ரெத்தினம், மாலா ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று மகனுக்கு திருமணம்

விபத்தில் இறந்த தவமணியின் மகன் வினோத் குமாருக்கு நாளை (புதன்கிழமை) பொம்மாடிமலையில் திருமணம் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தவமணி இறந்ததை தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது. மகனுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், தந்தை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்