கல்லூரி மாணவிகள் திடீர் சாலைமறியல்
கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி ஆலங்குளத்தில் கல்லூரி மாணவிகள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குளம்:
கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி ஆலங்குளத்தில் கல்லூரி மாணவிகள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவிகள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இதற்காக ஆலங்குளத்தில் இருந்து மகளிர் பஸ்சில் செல்வது வழக்கம்.
ஆனால் மகளிர் பஸ்களில் இடம் கிடைக்காமல் பின்னர் தென்காசியில் இருந்து வரும் அரசு பஸ்களில் பயணிக்க செல்லும்போது அந்த பஸ்களிலும் அதிகளவில் கூட்டம் இருப்பதால் மாணவிகள் கல்லூரிக்கு வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளதாக கூறப்படுகிறது.
சாலைமறியல்
இந்தநிலையில் நேற்று காலை கல்லூரிக்கு செல்வதற்கு அதிகமான மாணவிகள் பஸ்சிற்கு காத்திருந்தனர். ஆனால் பஸ் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் தேர்வு எழுத இருந்த மாணவிகள் அவதிப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த மாணவிகள் ஆலங்குளம் பஸ் நிலையம் முன்பு நெல்லை-தென்காசி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது மாணவிகள், கல்லூரி நேரத்திற்கு இயக்கப்பட்ட கட்டணமில்லா பஸ்களை தினந்தோறும் இயக்க வேண்டும். காலை-மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து மாணவிகளுக்கு மாற்று பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்த போலீசார், மாணவிகளின் கோரிக்கைகளை போக்குவரத்து துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.