கார்கள் நேருக்குநேர் மோதல் கல்லூரி மாணவர் பலி

கள்ளக்குறிச்சியில் 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிறுமி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2023-01-21 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கார்கள் மோதல்

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் நீலமேகம்(வயது 55). இவர் நேற்று தனது மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் பவானியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை நீலமேகத்தின் மகன் விக்னேஷ்(40) ஓட்டினார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் விஸ்வா(20). தனியார் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை-சேலம் ரோடு வழியாக ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை விஸ்வா ஓட்டினார்.

நேருக்குநேர் மோதல்

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் வந்தபோது இந்த இரு கார்களும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் 2 கார்களும் அப்பளம்போல் நொறுங்கின.

மேலும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி நீலமேகம், இவரது மனைவி சுதாலட்சுமி(48), விக்னேஷ், இவரது மனைவி உமாமகேஸ்வரி(38), விக்னேஷ் மகள் சஹானா(6), எதிரே வந்த காரில் இருந்த விஸ்வா, இவரது நண்பர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன்(20) சின்னகள்ளிப்பாடி கிராமம் சந்தானம் மகன் கிருஷ்ணராஜ்(20), அரும்பட்டு சமத்துவபுரம் பழனி மகன் முபின்ராஜ்(21), குமாரசாமி மகன் ஆகாஷ்(20), விழுப்புரம் ஆஸ்பத்திரி சாலை ரவிசங்கர் மகன் பிரசாந்த்(22) ஆகிய 11 பேரும் படுகாயம் அடைந்தனர்.

வாலிபர் பலி

உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்தில் பலியான பிரசாந்த் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து காரணமாக சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் விபத்துக்குள்ளான கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் இ்ந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்