மோட்டார்சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் சாவு

பாணாவரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் இறந்தார். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் அவர் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

Update: 2023-08-17 18:56 GMT

கல்லூரி மாணவர் சாவு

பாணாவரத்தை அடுத்த மாலைமேடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சஞ்சய் (வயது 17). சோளிங்கர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் மோட்டார் சைக்கிளில் கிராமத்திலிருந்து பாணாவரம் நோக்கி சென்றுள்ளார்.

புலிக்கல் அருகே சென்றபோது சாலை ஓரம் உள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் பைப்லைன் மீது ஏறியதில் வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்து வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவர் சஞ்சய் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறினர்.

சாலை மறியல் செய்ய முயற்சி

இதுகுறித்து தகவலறிந்த மாணவரின் உறவினர்கள் பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாததே சஞ்சய் உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறி பாணாவரம் மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுபற்றி தகவலறிந்த பாணாவரம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா சென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து மாணவரின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்