போலீஸ் ஏட்டு தாக்கியதாக கல்லூரி மாணவர் புகார்
பெரியகுளத்தில் போலீஸ் ஏட்டு தாக்கியதாக கல்லூரி மாணவர் போலீசில் புகார் கொடுத்தார்.
பெரியகுளம் கீழவடகரை தெய்வேந்திரபுரத்தை சேர்ந்த தங்கம் மகன் சந்தோஷ். இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அவருடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலரும் வந்தனர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தனிடம் சந்தோஷ் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், "நான் வீரபாண்டியில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறேன். எனது அண்ணன் வீரபாண்டி அரசு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் எனது அண்ணனை அழைத்துச் செல்வதற்காக பெரியகுளம் பஸ் நிலையத்தில் காத்திருந்தேன்.
அப்போது நண்பர்கள் சிலருடன் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அங்கு வந்த போலீஸ் ஏட்டு ஒருவர் என்னை விசாரிக்காமல் தாக்கினார். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். மேலும் போலீஸ் ஏட்டு தாக்கியபோது பதிவு செய்ததாக கூறி ஒரு வீடியோவையும் அவர் கொடுத்தார். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.