வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு

ஆற்காடு ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வுசெய்தார்.

Update: 2022-11-10 18:52 GMT

ஆற்காடு ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வுசெய்தார்.

ஆற்காடு ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல்பாடுகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் அவர் கூறிதாவது:-

ரூ.75,000 தொடக்க நிதி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக தொழில் புரியும் மகளிர் குழு உறுப்பினர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நலிவுற்ற நபர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் உரிய பயன்களை வழங்கி வருகிறது. உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் தலா ரூ.75,000 தொடக்க நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் இணை மானிய திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் தொழில் மதிப்பீடு, வணிகத்திட்டம், அரசு வணிக சான்றிதழ்கள் போன்றவை பெற்று தரப்பட்டு வங்கிக் கடன் பெறுவதற்கு மாநில அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதன் மூலம் அவர்கள் தொழில் புரிந்து முன்னேறுவதற்கான வாய்ப்பினை 30 சதவீதம் வங்கி மானியத்துடன் இத்திட்டம் வழங்குகிறது. இவர்களுக்கு உரிய தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதேபோல் இளைஞர்கள் எளிதில் வேலை பெறும் வகையில் சமுதாயத் திறன் பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

உற்பத்தியாளர்கள் குழுக்கள் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் பொருட்களை தாங்களே இடைத்தரகர் இல்லாமல் உரிய விலையில் விற்பனை செய்யவும் ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ள உற்பத்தியாளர் குழுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் இரண்டு உற்பத்தியாளர் நிறுவனங்கள் இம்மாட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பார்வையிட்டார்

முன்னதாக கலவை வட்டம் மேச்சேரியில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட துறையின் மூலம் மேச்சேரி தொழில் கூட்டமைப்பு மகளிர் குழு ரூ.75,000 மானியம் பெற்று தையல் தொழில் செய்து வருவதை பார்வையிட்டார். அதேபோல் ஆற்காடு வட்டம் செம்பேடு ஊராட்சியில் செம்பேடு தொழில் கூட்டமைப்பு மகளிர் குழு பிளாஸ்டிக் இல்லா இயற்கை நாப்கின் உற்பத்தி தொழில் செய்து வருவதையும் பார்வையிட்டார்.

அப்போது தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் கங்காதரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்