பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு

பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2023-05-17 00:15 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 90 மனுக்களை பெற்றார். தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து, ஊட்டி மேரிஸ்ஹில் பகுதியில் தீ விபத்தால் வீட்டின் பொருட்கள் சேதமடைந்தமைக்காக 4 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்துறை சார்பில், ரேஷன் கடைகளில் சிறப்பாக பணிபுரிந்த 2 விற்பனையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.4 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். சிறந்த கடை எடையாளர் ஒருவருக்கு 2-ம் பரிசு ரூ.2 ஆயிரத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை சார்பில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் 12 மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சால்வை மற்றும் புத்தகம் வழங்கி கலெக்டர் அம்ரித் பாராட்டினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) லோகநாதன், முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்