அரிக்கொம்பன் காட்டு யானையை பிடிக்க இடையூறு செய்யக்கூடாது; கலெக்டர் எச்சரிக்கை
கம்பத்தில் உலா வரும் அரிக்கொம்பன் காட்டு யானையை பிடிக்க இடையூறு செய்யக்கூடாது என்று பொதுமக்களை தேனி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கம்பம் நகருக்குள் புகுந்த அரிக்கொம்பன் காட்டு யானை, தற்போது கம்பம் பைபாஸ் சாலைக்கு அருகில் தென்னந்தோப்பு பகுதியில் உள்ளது. இப்பகுதியானது கம்பம் நகருக்கு மிக அருகில் உள்ள பகுதியாகும். மேலும், அரிக்கொம்பன் யானைக்கு மயக்க மருந்து செலுத்திட தேர்ந்த கால்நடை டாக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். யானையினை பிடிக்க 2 கும்கி யானைகளும் கொண்டு வர தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யானையை பிடிக்க ஏதுவாக, அதனை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்த வருவாய்த்துறை, போலீஸ் துறை மற்றும் வனத்துறையினரால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், யானையானது பொதுமக்களை தாக்காமல் இருக்க கம்பம் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அரிக்கொம்பன் யானை செல்லும் பாதையில் எவ்வித இடையூறும் செய்யக்கூடாது. புகைப்படம் மற்றும் வீடியோ ஏதும் எடுக்க யானையின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விடும் வரை பொதுமக்கள் தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.