அமைதி கூட்டத்தை கலெக்டர் நடத்த வேண்டும்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு குறித்து இன்று முடிவு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு குறித்து, அமைதி கூட்டத்தை இன்று நடத்தி கலெக்டர் முடிவு எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-01-12 20:45 GMT


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு குறித்து, அமைதி கூட்டத்தை இன்று நடத்தி கலெக்டர் முடிவு எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1-ந்தேதி பொங்கல் திருநாளையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஆண்டும் வருகிற பொங்கல் தினத்தன்று (நாளை மறுநாள்) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது..

அவனியாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவனியாபுரத்தில் பிற சமூகத்தை சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள்.

அனைத்து தரப்பினர் அடங்கிய குழு

ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டும், அனைத்து சமூகத்தினரையும் சேர்க்காமல் குறிப்பிட்ட சமூகத்தினர் அடங்கிய குழு மட்டும் அமைத்து, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த குழுவில் பட்டியல் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இது ஏற்புடையதல்ல.

கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

சுமூக தீர்வு ஏற்படவில்லை

இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சமூகத்தினர், பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்துகின்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவுக்கு ஒருங்கிணைப்பு குழு, ஆலோசனை குழு போன்றவை ஏற்படுத்தப்பட்டு கடந்த காலங்களில் விழா நடத்தப்பட்டு உள்ளது. தற்போது இதுதொடர்பாக அமைதி கூட்டங்களை நடத்தியும் அவர்களிடையே சுமூக தீர்வு காண முடியவில்லை, என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், "ஆலோசனை குழுவின் வேலை என்ன?" என கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் தரப்பில், ஆலோசனைக்குழுவில் கிராமத்தின் அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து காளைகளை தேர்வு செய்வது, பந்தல்கால் நடுவது, விழாக்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள், என்றார்.

பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, இந்த ஆண்டு ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்படவில்லை என்றார்.

மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு

இதையடுத்து நீதிபதிகள், அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கும் அமைதி கூட்டத்தை மதுரை மாவட்ட கலெக்டர் தலைமையில் நாளை (அதாவது இன்று) நடத்த வேண்டும். சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அவனியாபுரம் அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனை கமிட்டி உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம். சமாதான கூட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனரை இணைத்து மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்.

மேலும் அனைத்து சமுதாயத்தினர் பங்கேற்று நடத்தும் ஜல்லிக்கட்டில் ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலைமை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்