மாணவர்களின் கல்வித்திறனை கலெக்டர் ஆய்வு
மாணவர்களின் கல்வித்திறனை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாடு அடைய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள செட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை கலெக்டர் பாராட்டினார். செட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் அப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதற்கு தலைமை ஆசிரியர் லதா தலைமையிலான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதைப்பாராட்டினார். பள்ளியில் இருந்த மாணவ- மாணவிகளிடம் கலந்துரையாடிய கலெக்டர், அவர்களின் பாட புத்தகங்களை ஒரு சில மாணவர்களை வாசிக்கச் சொல்லி அவர்களின் கல்வித்திறனை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள அம்மா பூங்காவினை பார்வையிட்ட கலெக்டர் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயன்பாடற்றுக்கிடந்த உடற்பயிற்சி கூட பொருட்களை பத்து நாட்களுக்குள் சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவரம்பன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.