ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-07-26 16:00 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

3 இடங்களில் ஆய்வு

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

தங்க காதணி

இதற்கிடையில் கடந்த 30 செண்டி மீட்டர் ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு மனிதனின் மண்டையோடு உள்பட அனைத்து அங்கங்கள் உள்ள எலும்பு கூடுகள் கிடைத்தன.

இதுபோன்ற பலவேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

தற்போது சுமார் 3 மீட்டர் ஆழத்தில் தோண்டிய போது அங்கே நீளமான ஈட்டி போன்ற ஆயுதம், இடுக்கி போன்ற இரும்பு பொருட்களும், அவற்றின்மீது படிந்த நெல்லின் படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே முதன் முதலில் ஆதிச்சநல்லூர் தான் கிடைத்துள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அகழாய்வு பணிகள் நடந்து வரும் இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ், தொல்லியல் ஆய்வாளர் எத்திஸ்குமார் ஆகியோர் விளக்கமளித்தனர். அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களையும், முதுமக்கள் தாழிகளையும் அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து அகழாய்வு அதிகாரிகள் தங்கி இருக்கும் இடத்தினை பார்வையிட்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவதாக கூறினார். அவருடன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்