கலெக்டர், ஆர்.டி.ஓ. அலுவலகங்களை ஜப்தி செய்ய முயற்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் இழப்பீடு வழங்காததால், ஒரே நாளில் கலெக்டர், ஆர்.டி.ஓ. அலுவலகங்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐகோர்ட்டு உத்தரவு
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள வேலுநாச்சியார் பெருவளாகம் கட்டுவதற்கு கடந்த 1985-ம் ஆண்டு 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக 40-க்கும் மேற்பட்டோர் நிலம் கொடுத்தனர். இந்த நிலத்துக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 500 கொடுக்கப்பட்டது. ஆனால் நிலத்தை கொடுத்தவர்கள் கூடுதல் தொகை கேட்டு திண்டுக்கல் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து ஏக்கருக்கு ரூ.1 லட்சமும், 15 சதவீத வட்டியும் வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.பின்னர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு கிளை ஏக்கருக்கு ரூ.2½ லட்சம் வழங்க உத்தரவிட்டது. அதன்பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு உறுதி செய்யப்பட்டது.
2-வது முறையாக ஜப்தி முயற்சி
ஆனால் கோர்ட்டு உத்தரவுபடி நிலம் கொடுத்தவர்களுக்கு தற்போது வரை இழப்பீடு வழங்கவில்லை. இதனால் நிலம் கொடுத்தவர்கள் திண்டுக்கல் சப்-கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த கோர்ட்டு கலெக்டரின் கார் உள்பட 13 வகையான பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 22-ந்தேதி கோர்ட்டு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்வதற்காக வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள், கோர்ட்டு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஜனவரி 12-ந்தேதிக்குள் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று உறுதிஅளித்தனர்.
இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டனர். ஆனால் அதன் பிறகும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து 2-வது முறையாக கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்வதற்காக கோர்ட்டு ஊழியர்கள் நேற்று வந்தனர். அவர்களிடம் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பிப்ரவரி மாதம் 19-ந்தேதிக்குள் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனர்.
பாலாறு-பொருந்தலாறு அணை
இதேபோன்று பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் பாலாறு-பொருந்தலாறு அணை உள்ளது. இந்த அணை கட்டுமான பணியின்போது அந்த பகுதியில் உள்ள விளைநிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டது. அப்போது கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு அரசு சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் அணை கட்டுவதற்கு அதே பகுதியை சேர்ந்த தனியார் அறக்கட்டளை சார்பில் 250 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டது.
ஆனால் இழப்பீடை உயர்த்தி வழங்க வேண்டும் என அறக்கட்டளை சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு பழனி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு 2017-ம் ஆண்டு ரூ.5 கோடியே 14 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்கப்படாமல் காலதாமதம் செய்து வந்தது. இந்நிலையில் தனியார் அறக்கட்டளை சார்பில், பழனி கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த பழனி கோர்ட்டு முதன்மை சார்பு நீதிபதி ஹரிகரன் இழப்பீட்டு தொகை வழங்காததால் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
ஆர்.டி.ஓ. அலுவலகம் ஜப்தி
அதைத்தொடர்ந்து கோர்ட்டு பணியாளர்கள் நேற்று பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் ஜப்தி செய்வதற்கான ஆவணங்களை அங்கிருந்த வருவாய்த்துறை அலுவலர்களிடம் வழங்கினர்.
பின்னர் வருவாய்த்துறை சார்பில், இழப்பீடு வழங்க ஒரு மாதம் கால அவகாசம் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கலெக்டர் அலுவலகம், பழனி ஆர்.டி.ஓ. அலுவலகங்களை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.