டெங்கு தடுப்பு நடவடிக்கையை கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்வு
ஆலங்குளத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தென்காசி மாவட்ட புதிய கலெக்டர் ரவிச்சந்திரன் நேற்று ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆலங்குளம் தாலுகா மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்குள்ள பகுதிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி, ஓடைமரிச்சான் கிராமங்களுக்கு சென்ற அவர் தெருக்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் மேற்கொண்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து உடையாம்புளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் பொருட்களின் தரத்தினை பரிசோதனை செய்தார்.
மேலும் மருதம்புத்தூர் கிராமத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள வீடுகள் மற்றும் புதிய பஞ்சாயத்து அலுவலகத்தை ஆய்வு செய்தார்.
அப்போது மருதம்புத்தூர் பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை, பஞ்சாயத்து செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.