வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்காமல் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்-அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை

வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்காமல் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுறுத்தினார்.

Update: 2023-10-12 18:45 GMT

   ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் அதிகம் பாதிக்கக்கூடிய 8 இடங்கள், மிதமாக பாதிக்கக்கூடிய 35 இடங்கள், குறைவாக பாதிக்கக்கூடிய 79 இடங்கள் என மொத்தம் 122 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அந்த வழித்தடங்களின் மேப்பை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் மொத்தம் 1,091 நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மையங்களை தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்வையிட்டு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

நீர்நிலைகளில் எச்சரிக்கை

பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் காவல்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்பு படை, ஊர்காவல் படை, தேசிய மாணவர் படை ஆகியோரை ஒருங்கிணைத்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

பொதுப்பணித்துறையினர், அனைத்து நீர்நிலை பகுதிகளிலும் எச்சரிக்கை பதாகை அமைக்க வேண்டும், தேவையான மணல் மூட்டைகளையும் தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர், சாலையிலுள்ள பள்ளங்களை மூடி சரிசெய்ய வேண்டும். அதிகளவில் மழைநீர் தேங்கும் இடங்களை முன்பே கண்டறிந்து அவைகளை உடனடியாக அகற்றுங்கள்.

ஊரக வளர்ச்சித்துறையினர், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களை மழைக்காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து மீட்டு தங்கவைப்பதற்காக சமுதாயக்கூடங்கள், பள்ளிகளை நிவாரண முகாம்களாக அடிப்படை வசதிகளுடன் தயார் செய்திட வேண்டும்.

உயிர்காக்கும் மருந்துகள்

சுகாதாரத்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசர சிகிச்சை வார்டுகள், நடமாடும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவற்றை தயார் நிலையிலும், உயிர் காக்கும் மருந்துகளை போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறையினர், கால்நடைகளுக்கு நோய் பரவாமல் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.

கூட்டுறவுத்துறையின் சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க தேவையான அத்தியாவசிய பொருட்களை ஒரு மாதத்திற்கு தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

வேளாண்மை, தோட்டக்கலைத்துறையினர், மழைக்காலங்களில் ஏற்படும் பயிர் சேதங்களை துல்லியமாக கணக்கிட்டு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சி மருந்துகளை தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருக்க வேண்டும். மின்சாரத்துறை சார்பில், மின்கம்பங்கள், மின்சார உபகரணங்களை தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ளவும். தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை ஆய்வு செய்து அதனை சரிசெய்தல் வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய டேங்கர் லாரிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பருவமழைக்காலங்களில் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவும், மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்