பெண் குழந்தைகள் பள்ளி செல்லும் போதும், வரும் போதும் முக்கிய வழித்தடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட கலெக்டர் உத்தரவு

பெண் குழந்தைகள் பள்ளி செல்லும் போதும், வரும் போதும் முக்கிய வழித்தடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2022-08-30 19:02 GMT

பெண் குழந்தைகளை பாதுகாக்க அவர்கள் பள்ளி செல்லும்போதும், திரும்பும்போதும் போலீசார் முக்கிய வழித்தடங்களில் ரோந்து செல்ல வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட அளவில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான அவசர மைய தொலைபேசி 'சைல்டு லைன் 1098' ஆலோசனைக் கூட்டம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த துறைகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது :-

பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். ஏனென்றால் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கைகளை தெரிந்து கொண்டால் நேரடியாக புகார் அளிக்க முன் வருவார்கள். இதனால் தவறு செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்.

குழந்தை திருமண தடை சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

ரோந்துப்பணி

பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போதும், பள்ளி நேரம் முடிந்து வீடு திரும்பும் போதும் முக்கிய வழித்தடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தினால் குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தின் படி பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் சாக்லேட் வடிவில் கூட விற்பனைக்கு வருகிறது. அதனை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து கடைக்கு 'சீல்' வைத்து, கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'சைல்டு லைன் 1098' விழிப்புணர்வு குறித்து மின்னணு திரைகள் வைக்க அனைத்து வட்டங்களிலும் இடம் தேர்வு செய்திட வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறை, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம செவிலியர்கள் மூலம் குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

விழிப்புணர்வு பதாகைகள்

அனைத்து போலீஸ் நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலை கடைகள், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் 'சைல்டு லைன் 1098' குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் 'சைல்டு லைன்' மற்றும் 'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா' திட்டத்தின் பொது மேலாளர் மோகனவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ், மாவட்ட நீதிபதி நவீன் துரைபாபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, சமூக நல அலுவலர் இந்திரா, குழந்தைகள் நல குழும தலைவர் வேதநாயகம், நன்னடத்தை அலுவலர் ஏகாம்பரம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்