பொது சுகாதார வளாகம் இல்லாத நெல்லை கலெக்டர் அலுவலகம்

பொது சுகாதார வளாகம் இல்லாத நெல்லை கலெக்டர் அலுவலகத்தால் பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்

Update: 2022-10-02 21:59 GMT

நெல்லை கொக்கிரகுளத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், கிராம பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் அலுவலகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அலுவலகங்கள், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகம், சார்நிலை கருவூலம் ஆகியவை உள்ளன.

மனு கொடுக்க வரும் மக்கள்

மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம், நெல்லை உதவி கலெக்டர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், பாளையங்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், மாவட்ட கருவூலம், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், சுரங்க மற்றும் புவியியல் துறை அலுவலகம், கைத்தறி துறை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலகங்கள், பெண்கள் சிறை, தபால் நிலையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். மேலும் இங்குள்ள தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், கருவூலக அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் கோரிக்கை மனுக்களை வழங்க ஏராளமானவர்கள் வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் அவதி

இவ்வாறு எப்போதும் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதார வளாகம் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். இங்கு ஒரு கட்டண சுகாதார வளாகம் உள்ளது. அங்கு ஒரு நபருக்கு 3 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். இருந்தாலும் அந்த சுகாதார வளாகம் தினமும் திறக்கப்படுவது இல்லை. ஒரு சில நாட்கள் மட்டும் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை உள்ளது. அதுவும் பூட்டப்பட்டு கிடக்கிறது.

இந்த கழிப்பறையின் சாவி அருகே உள்ள கட்டண சுகாதார வளாகத்தில் உள்ளது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் அங்கு சென்று சாவி கேட்டால் அங்கிருப்பவர்கள் சரியான பதில் அளிப்பது இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

பழைய உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்த கழிப்பறை பூட்டப்பட்டு சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருகின்ற பொதுமக்கள் பொது சுகாதார வளாக வசதி இல்லாமல் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்று இயற்கை உபாதை கழித்து வந்தனர். தற்போது அங்கு கட்டுமான பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் அங்கும் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ஒருசிலர் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அலுவலக ஊழியர்கள் பயன்படுத்துவதற்காக கட்டி வைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை பயன்படுத்துகின்றனர். அப்போது அவர்களை ஊழியர்கள் சத்தம் போடுகின்றனர். குறிப்பாக திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வருகின்ற பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

எனவே, நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதார வளாகம் கட்டிக் கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை

இதுகுறித்து தச்சநல்லூரைச் சேர்ந்த தங்கவேலு கூறுகையில், 'நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதார வளாகம் இல்லாததால் மிகவும் அவதிப்படுகிறார்கள். கட்டண சுகாதார வளாகமும் சில நாட்கள் பூட்டியே கிடக்கிறது. ஆகையால் கலெக்டர் இதில் உரிய நடவடிக்கை எடுத்து உடனே பொது சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும்' என்றார்.

நெல்லை காட்டாம்புளியை சேர்ந்த இசக்கிமுத்து கூறும்போது, 'கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு சேவைகள் பெற வரும் ஏழை, எளிய மக்கள் இயற்கை உபாதையை கழிக்க உரிய வசதி இல்லாததால் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்று வந்தனர். தற்போது அங்கு கட்டுமான பணி நடைபெறுவதால், அங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்