தூய்மையை கடைபிடித்தால் மட்டுமே எவ்வித நோய்த்தொற்றுக்கும் ஆட்படாமல் சுகாதார வாழ்வை வாழ்ந்திட முடியும் பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை

தூய்மையை கடைபிடித்தால் மட்டுமே எவ்வித நோய்த்தொற்றுக்கும் ஆட்படாமல் சுகாதார வாழ்வை வாழ்ந்திட முடியும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

Update: 2022-07-10 16:27 GMT

விழுப்புரம் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மூலம் தூய்மைப்பணிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் வடக்கு தெரு, விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் நடந்த தூய்மைப்பணியை மாவட்ட கலெக்டர் மோகன், டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கலெக்டர் மோகன் கூறியதாவது:-

பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் குப்பைகளை தரம் பிரித்து வைப்பதுடன் தங்கள் பகுதி தூய்மைப்பணியாளர்களிடம் வழங்குவதால் அக்குப்பைகள் முறையாக மறுசுழற்சி செய்வதுடன் சுற்றுப்புறத்தை பாதுகாப்பதற்கும் ஏதுவாக அமையும்.

பொதுமக்களுக்கு அறிவுரை

பெரும்பாலான நபர்கள் தங்கள் வீடுகளிலுள்ள கழிவறை கழிவுகளை திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்களில் வெளியிடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நாள்தோறும் அவற்றினை சீர்செய்யும் பணியாளர்களுக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதோடு சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழ்நிலை உருவாகிறது. எனவே நாம் வசிக்கும் பகுதியை ஒவ்வொருவரும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் வர வேண்டும். தூய்மையினை கடைபிடிப்பதால் மட்டுமே எவ்வித நோய்த்தொற்றுக்கும் ஆட்படாமல் சுகாதார வாழ்வினை வாழ்ந்திட முடியும். முதல்-அமைச்சரின் எண்ணம் நிறைவேறும் வகையில் 'என் நகரம் - என் பெருமை" என்ற இந்நிலையினை உருவாக்கிடும் வகையில் அனைத்து பகுதிகளிலும் தூய்மையை கடைபிடித்து சுகாதாரத்துடன் வாழ்ந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, சுகாதாரமுடன் வாழ்வது குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டதோடு வீடுகள்தோறும் குப்பைகள் தேங்காத வண்ணம் பாதுகாத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகரமன்ற கவுன்சிலர் அன்சர்அலி, நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு அலுவலர் கோகுல் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்