கோலியனூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

கோலியனூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-06-08 14:47 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் கொண்டங்கி ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் பரப்பளவில் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது இத்திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பதால் அதற்கேற்ப பண்ணை குட்டை அமைத்து கரைப்பகுதியை ஆழப்படுத்தி மரங்கள் வளர்த்து மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் அமைப்பது மட்டுமின்றி அதை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பராமரித்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தடுப்பணை

அதனை தொடர்ந்து கண்டம்பாக்கம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு தடுப்பணையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து விவசாய பயன்பாட்டுக்கு பயன்பெறும், எனவே விவசாயத்தின் தேவைக்கேற்ப தடுப்பணைகள் அமைத்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதே பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் காவலர் குடியிருப்பு பகுதிகளுக்கு 450 மீட்டர் தூரம் ரூ.21 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு சாலை பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். அதன் பின்னர் கப்பூர் ஊராட்சி கோவிந்தபுரத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு வருவதையும், அதே பகுதியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.20 லட்சம் மதிப்பில் தனிநபர் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வெண்ணிலா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்