ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலையில் ரூ.3 கோடியே 43 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டிடப்பணிகள் நடக்கிறது. இதனை பார்வையிட்ட கலெக்டர் முருகேஷ் தரமான முறையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறதா என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து திருவண்ணாமலை உழவர் சந்தைக்கு அவர் சென்றார். அங்கு அன்றாடம் விலைப்பட்டியலுக்கு ஏற்ப காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலகம் மற்றும் பள்ளிக்கட்டிடங்கள், ஏரிக்கு நீர் செல்லும் கால்வாய் சீர் செய்யும் பணி, நல்லவன்பாளையத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கான அடித்தள பணிகளை பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.
எண்ணும் எழுத்தும் திட்டம்
மேலும் மேல்செட்டிப்பட்டு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் பள்ளிக்கட்டிடம், கீழ்செட்டிப்பட்டு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் பஸ் நிழற்குடை, நாச்சானந்தல் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் மற்றும் பக்கக்கால்வாய் உறிஞ்சிகுழி அமைக்கும் பணிகளையும், விஸ்வந்தாங்கல் ஊராட்சியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியின் கட்டுமானப் பணிகளையும் அவர் ஆய்வு செய்து கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நாச்சானந்தல் ஊராட்சியில் வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் 4 விவசாய பெருங்குடி மக்களுக்கு வேளாண் உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் அவர் அந்த பகுதியில் அரசு பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை பள்ளி மாணவ, மாணவிகளிடம் கற்பித்தல் முறை, ஆசிரியர்களிடம் கற்றல் குறித்த விளக்கத்தினையும் கேட்டறிந்தார். ஆய்வின் போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன், வேளாண் அலுவலர் ஷோபனா, தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.