விருத்தாசலம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
விருத்தாசலம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த கு.நல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி ரூ.31 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணியை நல்ல தரத்துடன் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.இதையடுத்து அதே பகுதியில் நடந்து வந்த 100 நாள் திட்ட பணிகள், கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலையரங்கம்
பின்னர் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் நடைபெற்று வந்த 100 நாள் திட்டப்பணிகளை பார்வையிட்டதோடு அங்கு மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். தொடர்ந்து விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலையரங்கம் மற்றும் சுற்றுச்சுவருடன் கூடிய ஆர்ச் அமைக்கும் பணியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் சேகர், நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் தணிகாசலம், தாசில்தார் அந்தோணி ராஜ், விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கலந்துரையாடல்
இதையடுத்து விருத்தாசலம் கம்மாபுரம், நல்லூர், மங்களூர், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சி பெண் தலைவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது இதில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், கணவர்கள் மற்றும் உறவினர்களின் தலையீடுகளை தவிர்த்து தன்னிச்சையாக ஊராட்சி பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கி கூறினார்.