வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

கிணத்துக்கடவு பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Update: 2023-08-17 20:00 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

வளர்ச்சி பணிகள்

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் நேற்று வந்தார். பொட்டையாண்டி புறம்பு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.5.28 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்க தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்தார். மேலும் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது? என்று சத்துணவு பணியாளரிடம் கேட்டறிந்தார்.

மாணவர்களிடம் பேசினார்

பின்னர் ரூ.12.61 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.4.80 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மாணவர்களுக்கான கழிப்பறை, ரூ.5.17 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மாணவிகளுக்கான கழிப்பறை, ரூ.30.56 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் வாய்ப்பாடு தெரியுமா? என்று கேட்டு, அதை அவர்களை கூற வைத்தார். மேலும் நீங்கள் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் டாக்டர், போலீஸ், என்ஜினீயர் என்று பலவித பதிலை கூறினார்கள்.

ஆய்வு

அதன்பின்னர் வடபுதூர் ஊராட்சி பகுதியில் ரூ.9.58 லட்சம் செலவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மூழ்கு குளம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு வேலைக்கு வந்த பணியாளர்களின் பதிவேட்டை ஆய்வு செய்தார். அங்குள்ள பணியாளர்களிடம் சம்பளம் முறையாக கிடைக்கிறதா?, வேலை முறையாக கிடைக்கிறதா? என்று கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கமலக்கண்ணன், கிணத்துக்கடவு தாசில்தார் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிக்கந்தர்பாட்சா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்