பாளையங்கால்வாய் பராமரிப்பு பணிகளை கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு
பாளையங்கால்வாய் பராமரிப்பு பணிகளை கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
தாமிரபரணி ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி 126 கிலோமீட்டர் தூரம் பயணித்து மன்னார் வளைகுடாவில் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் பாளையங்கால்வாய் பழவூர் அணைக்கட்டில் இருந்து பிரிந்து வருகிறது. 42 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த கால்வாய் மூலம் 57 குளங்கள் வாயிலாக சுமார் 3845 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த பாளையங்கால்வாயில் 20-வது கிலோ மீட்டரில் வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் கார்த்திகேயன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார்.
இந்த ஆய்வின் போது தாமிரபரணி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் தங்கராஜன், உதவிபொறியாளர் ரமேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.