வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஊனந்தாங்கல் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2022-11-08 19:10 GMT

நாமகிரிப்பேட்டை

கலெக்டர் ஆய்வு

தமிழக அரசு கலெக்டர் தலைமையில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒருமாதத்திற்கு முன்னரே மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும் அன்று தீர்வு வழங்க உத்தரவிட்டு உள்ளது. இதன் அடிப்படையில் ஊனந்தாங்கலில் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு திட்ட முகாமையொட்டி பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில், அனைத்துதுறைகளின் மூலம் கள ஆய்வு பணிகள் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஊனந்தாங்கல் ஊராட்சியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று கீரைக்காடு கிராமத்தில் சாலையின் ஓரத்தில் மழைநீர் வடிகால் வசதி கேட்டு வந்த கோரிக்கையின்படி, நேரடியாக கள ஆய்வு செய்தார். மேலும் கீரைக்காடு பகுதிக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த தேவையான நிலம், நிலத்தின் விவரங்கள் குறித்து அ பதிவேடு, கிராம புலப்படம் உள்ளிட்ட வருவாய்த்துறை ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் திட்ட மதிப்பீடு உடனடியாக தயார் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார், தொடர்ந்து வரகூர் கோம்பை கிராமத்தில் உள்ள வீடுகளில் தனித்தனியே கழிப்பிட வசதி அமைக்கப்பட்டு உள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வகுப்பறை கட்டிடம்

கொளக்க மேடு கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் பதிவேடுகளை பார்வையிட்டு வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின், கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு வழங்கப்படுவதை உறுதி செய்தார். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்ட உணவை ருசி பார்த்தார். மேலும் பதிவேடுகளை பார்வையிட்டு அதன்படி உணவுப்பொருட்கள் இருப்பு மற்றும் முட்டைகள் சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

பின்னர் சிறிய வரகூர் கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர், அங்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணிகளை பார்வையிட்டார். இந்த ஆய்வுகளின் போது தாசில்தார் கார்த்திகேயன், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்