திண்டுக்கல் அருகே மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு முகாம்; கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல் அருகே மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு முகாம்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-25 21:00 GMT

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வீடு, வீடாக விண்ணப்பம், டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து விண்ணப்ப பதிவு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம் நடக்கிறது. இதில் முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 609 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் பெண்களுக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு ஒரு அரசு அலுவலர், 2 தன்னார்வலர்கள் பணியில் இருக்கின்றனர்.

அதேபோல் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கியில் உடனுக்குடன் வங்கி கணக்கு தொடங்கவும் முகாமிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக முகாம் நடைபெற்றது. இதற்கிடையே சின்னாளப்பட்டி, காந்திகிராமம், ஆலமரத்துப்பட்டியில் நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாமை கலெக்டர் பூங்கொடி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது முகாம்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் கட்டாயம் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய தெரியாத பெண்கள், முதியோருக்கு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து பெறுவதோடு, கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் முகாமுக்கு வந்த பெண்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்