கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தொிவித்துள்ளாா்.
தியாகதுருகம்,
தமிழ்நாடு அரசு மூலமாக தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2022-2023 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதற்கு விண்ணப்பிக்க தகுதிகள் 1.1.2022 நாளன்று 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். மேலும் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தாலுகா அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழ் அறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3 ஆயிரத்து 500, மருத்துவப்படி ரூ.500 ஆக மொத்தம் ரூ.4 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டா் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.